உயிர் அழும். மனம் வலிக்கும்.
கல்லறை திசை தேடி
கால் நடக்கும்.
தூக்குக் கயிறு, விஷப்புட்டி
கடல், மலையுச்சி
மரணத்தின் விலாசம் தேடும்
நிராகரிக்கப்பட்ட நேசம்...
நில்.
நின்று ஒரு நிமிடம்
நிறுத்தி மூச்சு விடு.
செத்துவிட்டால் தீர்ந்திடுமா?
முன்னே பின்னே செத்திருக்கிறாயா?
செத்தால் செத்ததுதான்!
அந்த ஏழைச் சிறுமி பள்ளி செல்ல
எப்படி தானம் செய்வாய்
செத்துவிட்ட நீ?
அவள் படித்திருந்தால்
அவளின் பரம்பரைக்கே
பட்டினி இருந்திருக்காது தெரியுமா?
நீ தினம் செல்கிற
சாலையைக் கடக்க விழையும்
அந்த குருடருக்கு உதவ
நீ வேண்டாமா?
தாய் அழுகை துடைக்க வேண்டாம்
தந்தை கனவை செதுக்க வேண்டாம்
உலகம் உனக்கு வேண்டாம் - ஆனால்
உலகிற்கு நீ வேண்டும்!
பின்,
வியர்வை வழிய
வெயிலைப் பயணிக்கும்
அந்த முதியவருக்கு
நிழலைத் தரப்போகும் மரத்தை
யார் நடுவது? யார் நீரூற்றுவது?
அனாதைக் குழந்தையொன்று
நீ தத்தெடுத்து வளர்க்க என
காத்திருக்கிறதே தெரியுமா?
என்ன செய்யப்போகிறாய் செத்துவிட்ட நீ?
உன்னை நேசிக்க என
எங்கோ பிறந்திருக்கும் ஒருத்தியை
நீ நம்ப வேண்டாம்.
தந்தை சுகம் தேடி
அவள் பிள்ளை அழுகிறதே
கேட்கிறதா?
குழந்தையின் ஸ்பரிசம்
மலரின் அழகு
நண்பனுடன் அரட்டை
அம்மாவின் சாப்பாடு
இன்னொரு 20 - 20
சின்னதாய் ஒரு வெற்றி...
இத்தனையும் விட்டுச் சாகலாம் நீ...
நீ செத்தும் அவளிருப்பாளே
நினைவுன்னை எரிக்கவில்லை?
பிழைத்துக் கிடந்து வாழ்ந்துவிட்டு போ!
நிகழலாம் மறுபடியும்... எதுவும்...
செத்துவிட்டாலோ???? செத்ததுதான்...!
அப்புறம் நீ கேட்கவே முடியாது
'வாய்ப்பெனக்கு கொடுக்காமல்
செத்தானே படுபாவி...' - உன்
வாழ்க்கை அழும் ஒப்பாரி!
----->>>>>>>>> ஜெஸ்ஸி வெங்கட்
No comments:
Post a Comment